×

பாஜ தொண்டரின் தாய் மரணத்துக்கு குரல் கொடுக்கும் அமித்ஷா ஹத்ராஸ் சம்பவத்தில் மவுனம் காத்தது ஏன்? மம்தா கேள்வி

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட பாஜ தொண்டரின் தாயார் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கண்டனம் தெரிவித்த அமித்ஷா, உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து பலியான போது ஏன் குரல் கொடுக்கவில்லை என மம்தா கேள்வி எழுப்பி உள்ளார். மேற்கு வங்க மாநிலம், 24பர்கானாஸ் மாவட்டத்துக்குட்பட்ட நிம்தா பகுதியை சேர்ந்த பாஜ தொண்டரின் வீட்டின் மீது பிப்ரவரி 27ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாஜ தொண்டரின் 82 வயது தாய் காயமடைந்தார். இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஷோவா முஜூம்தர் ஜீ நேற்று உயிரிழந்தார். மூதாட்டி இறந்ததை அடுத்து நிம்தா காவல்நிலையம் முன் பாஜ தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிவிட்டர் பதிவில், ‘‘திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலில் மேற்கு வங்கத்தின் மகள் முஜூம்தர் ஜீயின் காயமடைந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வலியும் வேதனையும் நீண்ட காலத்துக்கு மம்தா சகோதரிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வன்முறை இல்லா மேற்கு வங்கத்தை உருவாக்க பாஜ பாடுபடும். மாநிலத்தில் உள்ள நமது சகோதரிகள், தாய்மார்களின் பாதுகாப்புக்காக மேற்கு வங்கம் போராடும்” என குறிப்பிட்டுள்ளார்.  

இதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பதிலில், ‘‘அந்த சகோதரி எப்படி உயிரிழந்தார் என்பது தெரியாது. பெண்களுக்கு எதிரான வன்முறையை திரிணாமுல் ஒருபோதும் ஆதரிக்காது. எனது சகோதரிகள், தாய்களுக்கு எதிரான வன்முறையை நான் ஆதரிக்க மாட்டேன். ஆனால் பாஜ இந்த விவகாரத்தை அரசியலாக்குகின்றது. அமித் ஷா நேரடியாகவும், டிவிட்டரிலும் இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்து வருகிறார். ஆனால் உத்தரப்பிரதேசம் ஹத்ராசில் பெண் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின்போது மட்டும் அமித் ஷா ஏன் மவுனம் காத்தார்?” என்றார். இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் புதிய புயலை கிளப்பி உள்ளது.


* வீல்சேரில் மம்தா 8 கி.மீ. பேரணி
மேற்கு வங்கத்தில் நாளை மறுநாள் நடைபெறும் 2ம் கட்ட தேர்தலில், முதல்வர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதி உள்பட 30 தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு அவரை எதிர்த்து முன்னாள் அமைச்சரும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி பாஜ. சார்பில் களமிறங்கி உள்ளார். இதனால், அத்தொகுதி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில், 2ம் கட்ட தேர்தலுக்கான, இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் முதல்வர் மம்தா தீவிரம் காட்டி வருகிறார். இதனையொட்டி, தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் பிரமாண்ட பேரணியை அவர் நேற்று நடத்தினார். தொண்டர்கள் புடை சூழ, காலில் கட்டுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, குதிராம் மோர் பகுதியில் இருந்து தாகூர் சவுக் வரையிலான 8 கி.மீ. தூரம் மாபெரும் பேரணியை நடத்தினார்.



Tags : Amit Shah Hadras ,Bajaj ,Mamta , Why did Amit Shah Hadras, who gives voice to the death of Bajaj volunteer's mother, remain silent on the incident? Mamta question
× RELATED இலவச ரேஷன் பொருட்களை உங்க சொந்த காசுல...